பெரியகுளத்தையடுத்த லட்சுமிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு சொந்தமான சர்ச்சைக்குரிய  கிணறு, போர்வெல் உள்ளிட்ட 12 சென்ட் நிலத்தை தமிழக ஆளுநர் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்படவுள்ளது.

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் ஓபிஎஸ்சின் மனைவி விஜயலட்சுமி பெயரில் ராட்சத கிணறு இருந்தது. அந்த கிணற்றில் இருந்து அதிக அளவு தண்ணீர் உறிஞ்சப்பட்டதால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விவசாயமும் பாதிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமிபுரம் மக்கள், அந்த கிணற்றை ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில்  ஓபிஎஸ் அந்த கிணற்றை லட்சுமிபுரம் ஊராட்சிக்கு விற்பனை செய்ய முன்வந்தார். அந்த கிணற்றை வாங்க ஊர் மக்களும் பணம் திரட்டினர்.

ஆனால் சர்ச்சைக்குரிய கிணறு ஓபிஎஸ்ன் நண்பர் சுப்புராஜ் என்பருக்கு விற்கப்பட்டதாக தகவல் கிடைத்தையடுத்து அதிர்ச்சி அடைந்த மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சவார்த்தையில் ஏற்கனவே உறுதி அளித்தபடி கிணறு, போர்வெல், 12 சென்ட் நிலம் போன்றவற்றை தானமாக தருவதாக ஓபிஎஸ் உறுதியளித்தார்.

இதையடுத்து சுப்புராஜ் பெயரில் உள்ள கிணறு, நிலம் போன்றவற்றை இன்று அல்லது ஜுலை 31 ஆம் தேதி ஊராட்சிக்கு பத்திரப்பதிவு செய்ய உள்ளதாகவும், இந்த பத்திரம் தமிழக ஆளுநர் என்ற பெயரில் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

அந்த பத்திரத்தில் லட்சுமிபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சிக்கு  இந்த சொத்துக்கள் பாத்தியப்பட்டவை என்ற வாசகங்கள் இடம்பெறும் என்றும், அதன்பின் அந்த கிணறு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்றும் கிராம மக்கள் கூறினர்.