OPS prayer

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், தனது குடும்பத்தினருடன் சாமி கும்பிட்டார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஓபிஎஸ் சிறு வயது முதலே மிகுந்த பக்தி உடையவர். எந்த காரியத்ததைச் செய்தாலும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வார்.

இந்நிலையில் நேற்று ஆர்.கே.நகர் தொகுதிக்கு தனது அணி சார்பில் மதுசூனனை வேட்பாளராக அறிவித்த கையோடு, மதுரை புறப்பட்டுச் சென்ற ஓபிஎஸ் நேராக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தார். குடும்பத்தினருடன் வந்த அவர் பக்தியுடன் சாமி கும்பிட்டார்.

முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஓபிஎஸ்க்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் ராஜபாளையம் சென்று அங்கு தங்கிவிட்டு இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது குலதெய்வமான பேச்சியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள செண்பகத் தோப்பு வனப்பகுதியில் ஓபிஎஸ்ன் குல தெய்வம் பேச்சியம்மன் கோவில் உள்ளது. அங்கு இன்று வழிபாடுகள் நடத்த உள்ளார்.

ஓபிஎஸ் ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் ஆகும் போதும் தவறாமல் வனபேச்சியம்மன் கோவிலுக்கு வருவார்.

மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆனபோது, குலதெய்வக் கோவிலுக்கு அவரால் வர முடியவில்லை என்றும் அதனால் தான் அவர் ராஜினாமா செய்ய நேரிட்டதாகவும் அவரது குடுப்பத்தினர் நம்புகின்றனர்

இதையடுத்துதான் நேற்று வேட்பாளர் அறிவித்த கையோடு குலதெய்வம் கோவிலுக்கு அவர் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவுகள் ஓபிஎஸ்சின் அரசியல் வாழ்வை முடியு செய்யும் என்றே பரவலாக பேசப்படுகிறது.

இந்நிலையில் தனது குலதெய்வமான பேச்சியம்மனை நம்பி வழிபடச் சென்றுள்ளார் ஓபிஎஸ்… பேச்சியம்மன் ஓபிஎஸ் க்கு அருள் புரிவாரா?