Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் கொரோனா 4 வது அலையா? கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துக..அலறும் ஓ.பி.எஸ்

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதன் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
 

Ops has stressed the need to increase controls as the spread of corona in Tamil Nadu is on the rise
Author
tamilnadu, First Published Jun 10, 2022, 10:54 AM IST

தினந்தோறும் அதிகரிக்கும் கொரோனா

கொரோனா பாதிப்பு தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று நோயின் முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை ஆகியவை முடிந்து, கடந்த இரண்டு மாதங்களாக அந்தப் பெயரை மறந்திருந்த நிலையில், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், ஒமைக்ரான் வைரசின் மாறுபட்ட வடிவங்களினாலான வைரசால் தமிழ்நாட்டில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வருவதும் மீண்டும் ஒருவித அச்சத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.01-06-2022 அன்று 3,712 என்றிருந்த கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 08-06-2022 அன்று 7,240 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 01-06-2022 அன்று 139" என்றிருந்த கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 08-06-2022 அன்று 185 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னை, செங்கல்பட்டு,
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 152 நபர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் இது மிகவும் அதிகமானது என்றும், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும், இந்த இரண்டு மாநிலங்களிலிருந்து மட்டும் கடந்த வாரத்தில் கொரோனா தொற்றினால் 60 விழுக்காடு நபர்கள் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தத்தில் பத்து மாநிலங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், கடந்த இரண்டு மாதங்களாக உயிரிழப்புகள் ஏதுமில்லை என்றாலும், ஏப்ரல் மாதத்தில் 20-லிருந்து 30-ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து தற்போது 185 ஆக உயர்ந்துள்ளது.

Ops has stressed the need to increase controls as the spread of corona in Tamil Nadu is on the rise

சரியாக கடைப்பிடிக்காத கட்டுப்பாடுகள்

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டில், சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒமைக்ரான் வைரசின் உருமாறிய வடிவங்களான BA4 மற்றும் BA5 வைரஸ்களால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த 12 நபர்களில் நான்கு பேருக்கு BA4 வகை கொரோனா தொற்றும் மீதமுள்ள எட்டு பேருக்கு BA5 வகை கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அது நான்காவது அலை துவங்கியதற்கான அறிகுறி என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. தமிழ்நாட்டில் மூன்று வாரங்களுக்கு முன்பு நாவலூரில் ஒருவர் BA4 வகை வைரஸினால் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் தற்போது மேலும் 12 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும், குறிப்பாக கர்நாடகா, கேரளா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், உருமாறிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, இதனைக்  கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், அவை சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை என்பதுதான் கள நிலவரம்.

Ops has stressed the need to increase controls as the spread of corona in Tamil Nadu is on the rise

கட்டுப்பாடுகள் அதிகரிக்க வேண்டும்

எனவே, கொரோனா தொற்று அதிகரித்து வருவதையும், உருமாறிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மக்களிடையே எடுத்துரைத்து, இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Corona : மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 8 ஆயிரம் பேருக்கு பாதிப்பு.. இன்றைய பாதிப்பு நிலவரம் !

Follow Us:
Download App:
  • android
  • ios