அதிகாலை 4 மணிக்கே கடையை திறந்து கல்லா கட்டும் டாஸ்மாக்; சீரழியும் கிராம மக்கள்...
திருவண்ணாமலையில் உள்ள நல்லூர் கிராமத்தில் அதிகாலை 4 மணிக்கே திருட்டுத்தனமாக டாஸ்மாக் சாரயக் கடையை திறந்து வியாபாரம் செய்கின்றனர். இதனால், கிராம மக்களின் வாழ்க்கை சீரழிகிறது என்று ஆட்சியரிடத்தில் இப்பகுதி மக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் உள்ள நல்லூர் கிராமத்தில் அதிகாலை 4 மணிக்கே திருட்டுத்தனமாக டாஸ்மாக் சாரயக் கடையை திறந்து வியாபாரம் செய்கின்றனர். இதனால், கிராம மக்களின் வாழ்க்கை சீரழிகிறது என்று ஆட்சியரிடத்தில் இப்பகுதி மக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் இரத்தினசாமி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறுப் பகுதிகளில் வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சியரிடத்தில் கொடுத்தனர். வீட்டுமனைப் பட்டா, ரேசன் அட்டை, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400-க்கும் மேற்பட்டோர் மனுக்கள் கொடுக்கப்பட்டன.
அம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இங்கு 30-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் வந்தவாசி தாலுகா, தெள்ளார் ஊராட்சி ஒன்றியம், நல்லூர் கிராமத்திலுள்ள பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர். அந்த மனுவில், "எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையை அகற்ற வேண்டும் என்று போன மாதம் 15-ஆம் தேதி நடந்த கிராமச் சபைக் கூட்டத்தில் பொதுமக்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினோம்.
டாஸ்மாக் சாராயக் கடை, அரசு விதிமுறைப்படி பகல் 12 மணிக்குதான் திறக்கப்பட வேண்டும். ஆனால், இந்த சாராயக் கடையோ அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டு வருகிறது. இதனால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன.
குடிகாரர்கள் குடித்துவிட்டு மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தை நாசம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களிலும், பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகும் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிகாரர்கள் புகுந்து அராஜகமாக நடந்து கொள்கின்றனர். இதனால் நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, அந்த டாஸ்மாக் சாராயக் கடையை உடனே அகற்ற வேண்டும்" என்று அதில் வலியுறுத்தி இருந்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தார்.