open water from kabini dam in cauvery 50000 cf
தென் மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதையடுத்து கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து 50000 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து திறந்துவிடப்பட்ட நீர் ஒகனேக்கலில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியது. இதையடுத்து கன்னியாகுமரி முதல் வட இந்தியாவின் பல பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது.
கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தற்போது மும்பை மாநகரமே நீரில் மூழ்கியுள்ளது. தொடர் கனமழையால் மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களிலும் கனமழை கொட்டி வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கர்நாடக மாநிலம் குடகு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி வருகிறது.

இதையடுத்து கபினி அணைக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரி நீராக கபினி அணையில் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது.
இதே போன்று கேஆர்எஸ் அணையில் இருந்தும் 5000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியற்றப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதையடுத்து தமிழக அரசு எதற்கும் தயாராக இருக்கும்படி மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் ஒக்கனேக்கலில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
