Open the Pachchiparai dam immediately for water irrigation - Farmers assert ...
கன்னியாகுமரி
பேச்சிப்பாறை அணையை உடனே திறந்து பாசனத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கன்னியாகுமரியில் நடந்த மாநாட்டில் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க குமரி மாவட்ட மாநாடு குமரி மாவட்ட 16-வது மாநாடு கடையாலுமூட்டில் தொடங்கி இரண்டு நாள்கள் நடைப்பெற்றது.
இதன் நிறைவு நாளில் களியல் சந்திப்பிலிருந்து விவசாயிகளின் பேரணி நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பொது மாநாடு நடைப்பெற்றது.
இதற்கு மாவட்டத் தலைவர் சைமன் சைலஸ் தலைமைத் தாங்கினார். மாநாடு வரவேற்புக் குழுச் செயலர் எஸ்.ஆர். சேகர் வரவேற்றார்.
அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கே.வரதராஜன், மாநில பொதுச் செயலர் பி.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் என். முருகேசன், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் செல்லசுவாமி, எஸ்.விஜி, ஆர். ரெவி, கே. ஆறுமுகம் பிள்ளை உள்ளிட்டோர் பேசினர்.
இந்த மாநாட்டில், “பேச்சிப்பாறை அணையை உடனே திறந்து பாசனத்திற்கு தண்ணீர் விட வேண்டும்.
வன விலங்குகளால் பயிர்சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் வன விலங்குகளை காட்டுகள் கட்டுப்படுத்த வேண்டும்.
மாவட்டத்தில் அணைகள், கால்வாய்களை தூர் வார வேண்டும்.
ரப்பர் விலையை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதுடன், ரப்பர் மறுநடவிற்கு நிறுத்தப்பட்ட மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஆர். செல்லசுவாமி, செயலராக ஆர். ரவி, பொருளராக ஜே. சதீஷ், துணைத் தலைவர்களாக சைமன் சைலஸ், ஆறுமுகம் பிள்ளை, மாதவன், துணைச் செயலர்களாக எஸ்.ஆர். சேகர், விஜி, சிவகோபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டின் இறுதியில் மாநாடு வரவேற்புக் குழுத் தலைவர் பி. நடராஜன் நன்றித் தெரிவித்தார்.
