Only one government college in Ariyalur Students contesting for seats Parents request ...
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரே அரசு கலைக் கல்லூரியில் சேர மாணவர் போட்டி போடுவதால் ஒவ்வொரு துறைக்கும் கூடுதல் சீட்டு ஒதுக்க வேண்டும் என்றனர் பெற்றோர்கள்.
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவ - மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதனை கல்லூரி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இளங்கலை வணிகவியல், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். இதில் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் 100 மாணவ - மாணவிகள் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து இன்று இயற்பியல், வேதியல், கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட பாட பிரிவுகளுக்கும், நாளை தமிழ், வரலாறு, பொருளியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ - மாணவிகள் காலை 9 மணிக்கு அசல் சான்றிதழ்கள் மற்றும் பெற்றோர் அல்லது பாது காவலருடன் கல்லூரிக்கு வரவேண்டும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற கலந்தாய்வில் மாணவ - மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்திருந்தனர். மேலும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே அரசு கலைக் கல்லூரி இது என்பதால் ஏராளமான மாணவ - மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க வருகின்றனர். இதில் பலருக்கு இடம் கிடைக்காததால் ஏமாற்றுத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே, தமிழக அரசானது ஒவ்வொரு பாட பிரிவிலும் கூடுதல் இடங்கள் ஒதுக்கி ஏழை மாணவ - மாணவிகளுக்கு கல்லூரியில் இடம் கிடைக்க செய்யுமாறு பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.
