அரூர்

அரூரில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தேவாதியம்மன் திருவிழாவில் 219 ஆடுகளை பலியிட்டு, அதன் கறியை பிராசாதமாக பெற்று சமைத்து சாப்பிட்டு ஆனந்தமாக கொண்டாடினர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் தேவாதியம்மன் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அரூர் சுற்றுவட்டார பகுதியில், பல்வேறு கிராமங்களில் வசிக்கும் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர். இதன்படி இந்த ஆண்டு தேவாதியம்மன் திருவிழா அரூரில் நடைபெற்றது.

இதனையொட்டி அரூர் காமாட்சியம்மன் கோவிலின் பின்புறம் உள்ள தேவாதியம்மன் தோட்டத்தில் உள்ள ஆவார மரத்தின் கீழே சிறப்பு பூசைகள் நடத்தப்பட்டன.

இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது இதன் சிறப்பு. இந்த விழாவில் அரூர் மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் திரளாக கலந்து கொண்டு குடும்பநலம், ஊர்நலம், தொழில் மேம்பாடு, மழை வளம், உலக அமைதி ஆகியவற்றை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இந்த விழாவின் முதற்கட்டமாக நேற்று முன்தினம் இரவு 24 ஆட்டுக்குட்டிகள் பலியிடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பொங்கல், பொரி, கடலை படையலிட்டு விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 195 ஆடுகள் பலியிடப்பட்டு தேவாதியம்மனுக்கு சிறப்பு பூசை நடத்தப்பட்டது.

இந்த விழாவில் மொத்தமாக பலியிடப்பட்ட 219 ஆடுகளின் கறி வெட்டப்பட்டு 2 ஆயிரத்து 45 குடும்பங்களுக்கு பங்கிட்டு வழங்கப்பட்டது.

இவ்வாறு பங்கிடப்பட்டு வழங்கப்பட்ட கறியை ஒவ்வொரு குடும்பத்தினரும் பிரசாதமாக சமைத்து சாப்பிட்டு ஆனந்தமாக கொண்டாடினர்.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் வெங்கடேசன், செயலாளர் சிவபிரகாசம், பொருளாளர் ரவி, தாளமுத்து, முன்னாள் தலைவர் வெள்ளை முருகன், கண்ணையன் மற்றும் விழாக்குழு நிர்வாகிகள் செய்து இருந்தனர்.