தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வலியுறுத்தி அக்கிராம மக்கள் அங்குள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று 31வது நாளாக நடைபெறுகிறது.

இதுகுறித்து, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் கூறியதாவது:-

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தர்மராஜன், ரமேஷ் ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்காமல் காலதாமதம் ஆவதற்கு தர்மராஜன் பெயரை தர்மதுரை என்றும் ரமேஷ் பெயரை ராஜேஷ் என்றும் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் எழுதி உள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்களிடம் கேட்டு பெயரை சரியாக எழுதி இருக்கலாம். அவசர, அவசரமாக பொய் வழக்கு போட்டதால் தான் பெயரை தவறாக எழுதி உள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இத்தகைய தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓஎன்ஜிசி கதிராமங்கலத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்கிறோம். எங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை அறப்போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.