தஞ்சாவூர்

திருவாரூர் அருகே விளை நிலங்களில் குழாய்களை பதிப்பதற்காக மீண்டும் டிராக்டர், பொக்லைனுடன் வந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தினரை, மக்கள் கூட்டமாக திரண்டு திணறடித்தனர். குழாய்களை மக்கள் தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூர் அருகே கருப்பூர் கிராமம் இருக்கிறது. இங்கு ஓஎன்ஜிசி நிறுவனம் விளை நிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டது.

இதற்கு மக்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அதனால், ஒஎன்ஜிசி நிறுவனம் மக்களுக்கு தெரியாமல் அவ்வப்போது வந்து குழாய் பதிப்பதற்கான பணிகளை தொடங்கிச் சென்றது.

பணிகளைத் தொடங்குவதற்கான இரும்புக் குழாய்களை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு வந்து கருப்பூர் கிராமத்தில் வைத்துள்ளன. மேலும் குழாய் பதிப்பதற்கு பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டது. 

குழாய் பதிக்கும் பணியை ஒஎன்ஜிசி மீண்டும் தொடங்கியதை அறிந்த கருப்பூர், அலிவலம், அடியக்கமங்கலம் கிராம மக்கள் அங்கு திரளாக கூடினர். அப்போது டிராக்டரில் ஏற்றி வரப்பட்ட இரும்புக் குழாய்களை தூக்கி வீசினர்.

விளை நிலங்களில் குழாய் பதிக்கக் கூடாது என்று முழக்கங்களை எழுப்பி ஒஎன்ஜிசி சேர்ந்தவர்களை திணறடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமாறன், வட்டாட்சியர் சண்முகவடிவேலு ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அளித்த உறுதியின் பேரில் மக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

மக்கள் எதிர்க்கும் ஒரு திட்டத்தை அவர்களிடம் திணிப்பது குற்றம் என்று கலைந்துச் சென்ற கூட்டத்தினர் தங்களுக்குள் பேசிக் கொண்டுச் சென்றனர்.