தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் நடந்த விபத்து குறித்து விசாரணை இன்று தொடங்கியது. இந்த ஆணையத்தின் வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த், விபத்து நடந்த களிமேடு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் நடந்த விபத்து குறித்து விசாரணை இன்று தொடங்கியது. இந்த ஆணையத்தின் வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த், விபத்து நடந்த களிமேடு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்துக்கான கோயில் உள்ளது. ஆண்டுதோறும் அப்பர் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திர தினத்தில் இங்கே விமர்சையாக சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 26 ஆம் தேதி காலை திருவிழா தொடங்கியிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. அப்பர் மடத்துக்குச் செல்வதற்காகச் சாலையின் வளைவில் தேரை இழுக்கும் போது அருகே இருந்த பள்ளத்தில் தேரின் சக்கரம் இறங்கியுள்ளது. தேர் நின்ற இடத்துக்கு மேற் பகுதியில் உயர்மின் அழுத்த கம்பி சென்றுள்ளது.

தேர் சாய்ந்த நிலையில் அதன் மேல் பகுதி உயர் மின் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் நிதி உதவியையும் முதலமைச்சர் வழங்கினார். பின்னர் இந்த விபத்து குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. இதை அடுத்து தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் நடந்த விபத்து குறித்து விசாரணை இன்று தொடங்கியது.

இந்த ஆணையத்தின் வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த், இன்று விபத்து நடந்த களிமேடு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், விபத்து குறித்து நாளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெறும். பொதுமக்கள் நேரில் வந்து விசாரணையில் பங்கேற்கலாம் என்று தெரிவித்தார். இதனிடையே களிமேடு தேர் விபத்து நடந்த இடத்தில் விசாரணைக்கு பின்னர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒருநபர் விசாரணை ஆணைய தலைவர் குமார் ஜெயந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
