Savukku Shankar: சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு; திடீரென எண்ட்ரி கொடுத்த மாணவி ஸ்ரீமதியின் தாயார்
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த யூடியூபர் சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மாணவி ஸ்ரீமதியின் தாயார் சவுக்கு சங்கர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்துகளை பதிவு செய்தமைக்காக தேனியில் தனியார் விடுதியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும் போது சவுக்கு சங்கரிடம் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் தென்மாவட்ட மக்களிடையே சாதிய மோதல்களை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தமைக்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவாகி வரும் நிலையில் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், குண்டர் தடுப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று சவுக்கு சங்கரின் தாயார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பான ஆவணங்களை இன்றே தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே இன்று திடீரென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் வந்திருந்தார். காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உயிரிழந்த தனது மகளின் மரணம் குறித்து அவதூறு பரப்பிய சவுக்கு சங்கர் இதற்காக பள்ளி நிர்வாகத்திடம் பணம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் என்னை பற்றியும், என் மகள் குறித்தும் அவதூறு பரப்பிய சவுக்கு சங்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Redpix ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கியது திருச்சி நீதிமன்றம்
இந்நிலையில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கர் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவானது இன்று மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்குசங்கர் தரப்பில் நீதிமன்றத்தில் கால அவகாசம் கோரிய நிலையில் ஜாமின் கோரிய வழக்கு விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.