அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் மாணவிகள் அட்ஜெஸ்ட் செய்து கொண்டால், 85 சதவீத மதிப்பெண்களும், பணமும் தருவதாக கூறி நிர்பந்தப்படுத்தினார்.

ஆனால், மாணவிகள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி விட்டனர். இந்த நிலையில் நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசும் ஆடியோ வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து பேராசிரியை நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. ஆடியோவில் பேசியது நான் தான் என்றும், தான் பேசியதை மாணவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் பேராசிரியை நிர்மலா தேவி கூறியுள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்விவகாரத்தில், பேராசிரியை மீதான புகார் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு ஒன்றை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.இதையடுத்து பேராசிரியர் நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழக அரசின் தலைமை செயலர் அந்தஸ்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். சந்தானம் தலைமையில் விசாரணை நடைபெறும் என்றும், குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் ஆளுநர்  தெரிவித்துள்ளார்.