இராமநாதபுரம்

மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி ரூ.5.70 இலட்சம் அபேஸ் செய்த இருவரில் ஒருவர் சிக்கினார். மற்றொருவரை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், துரையூர் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் அருள்ராஜ் (26). இவர் அப்பகுதியில் வெளிநாட்டிற்கு ஆள்களை அனுப்பும் முகவராக இருந்தார்.

இவரிடம் பரமக்குடி பாண்டியன் தெருவைச் சேர்ந்த அண்ணசாமி மகன் அருண் மலேசிய நாட்டில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், அங்கு வேலைக்கு ஆள்கள் தேவைப்படுவதாகவும் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி அருள்ராஜ் அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரிடமிருந்து ரூ.5.70 இலட்சம் வசூலித்து மலேசியா செல்வதற்கான விசா பெறுவதற்காக அருண் மற்றும் அவரது சகோதரர் விக்னேஷ்குமார் ஆகியோரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடுத்துள்ளார்.

அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட அருண் மற்றும் விக்னேஷ்குமார் இருவரும் வெளிநாடு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் அருள்ராஜ் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விக்னேஷ்குமாரை கைது செய்தனர். தலைமறைவான அருணை வலைவீசித் தேடி வருகின்றனர்.