கன்னியாகுமரி

நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து கன்னியாகுமரியில் வரும் பிப்ரவரி  27 கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் வணிகர் சங்கத் தலைவர் சதாசிவன் தம்பி, செயலர் விஜயன், பொருளாளர் ரவி ஆகியோர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். 

அதில், "ஆரல்வாய்மொழி - நெடுமங்காடு சாலையில் பொன்மனை முதல் குலசேகரம் உண்ணியூர்கோணம் வரையிலான சுமார் 6 கி.மீ. தொலைவு,  பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்த நிலையிலேயே உள்ளது. 

தற்போது இச்சாலையிலிருந்து கிளம்பும் புழுதியால் வணிகர்கள், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். சாலையோர வீடுகளில் குடியிருப்போரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினரிடம் தொடர்ந்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

எனவே, நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்தும்,  சாலையை சீரமைக்க வலியுறுத்தியும்,   பிப்ரவரி 27-ஆம் தேதி குலசேகரம் பகுதியில் அனைத்துக் கடைகளையும் அடைத்து எதிர்ப்புத் தெரிவிப்பதுடன்,  குலசேகரம் அரசமூடு சந்திப்பில் முகக் கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.