ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

பொங்கல் பண்டிகைக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 கணினி முன்பதிவு மையங்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் வரும் 11, 12, 13 ஆகிய 3 நாள்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சென்னையில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள், மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்குச் செல்ல தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் 3 நாள்களும் சேர்த்து 11, 270 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நீண்ட தொலைவு செல்லும் சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி என மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு மையங்களை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண்டிகையின் போது சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார். மேலும், பண்டிகை கால நெரிசலை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.