Old man killed son-in-law Police investigate

மகளை கொடுமைப்படுத்தி, தன்னையும் கொல்ல முயன்ற மருமகனை, மாமனார் கொலை செய்த சம்பவம் கோவை அருகே நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ள கரடிமடையைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (60). கூலித்தொழிலாளியான இவருக்கு கவிதா என்ற மகள் உள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாயன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்க முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த இரு குடும்பங்களும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றன.

மாயன், தினமும் மது அருந்திவிட்டு, மனைவி கவிதாவுடன் சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் கடந்த வாரமும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, கவிதா தனது குழந்தைகளுடன், பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் மாயன் மட்டும் தனியே இருந்துள்ளார். மனைவியை வீட்டுக்கு அழைத்து வரவும் அவர் முயன்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ளிங்கிரியை சந்தித்த மாயன், தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மாயன், தன்னிடம் இருந்த கத்தியைக் காட்டி, வெள்ளியங்கிரியை மிரட்டியுள்ளார்.

இதனால் கோபமடைந்த வெள்ளியங்கிரி, மாயனிடம் இருந்த கத்தியைப் பிடுங்கி அவரை குத்தினார். இதில் மாயன் படுகாயமடைந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தோர், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியிலேயே மாயன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து வெள்ளிங்கிரியை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.