சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு முதியவர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

துரைப்பாக்கத்தை சேர்ந்த ஆக்னெஸ் மற்றும் குமார் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி தலா 75 ஆயிரம் ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. 

இதை நம்பி 30 பேரிடம் பணம் வாங்கிக் கொடுத்த நிலையில், உறுதியளித்தபடி வீடு வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டதாக துரைப்பாக்கத்தைச் சேர்ந்த மற்றொரு குமார் என்பவர் புகார் தெரிவித்துள்ளார். 

வீடு வாங்கி தராமல் இருவரும் ஏமாற்றிய நிலையில், பணத்தை பெற்று தர கோரி பல முறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இதை போலீசார் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் விரக்தி அடைந்த குமார், இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை தடுத்த போலீசார், அவரிடம் வேப்பேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.