13 அம்ச கோரிக்கைகள்... 2வது நாளாகத் தொடரும் ஓலா, உபர் வாடகை கார் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்
ஆட்டோ கட்டணங்களைப் போல வாடகை கார் கட்டணத்தையும் தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வாடகை கார் ஓட்டுநர்கள் முன்வைக்கின்றனர்.
ஓலா, ஊபர் வாடகை கார் ஓட்டுநர்கள் சென்னையில் 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்கின்றனர். கோவை, மதுரை, திருச்சியிலும் வாடகை கார் ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
இந்த மூன்று மாவட்டங்களிலும் இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற நகரங்களில் ஓலா, உபர் போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தி வாடகை கார்களை புக் செய்யும் வசதியை அரசே தொடங்க வேண்டும், ஆட்டோ கட்டணங்களைப் போல வாடகை கார் கட்டணத்தையும் தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
ஓலா, உபர் போன்ற அப்ளிகேஷன்கள் மூலம் வாடகை கார் புக்கிங் செய்வதை முறைப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும், பைக் டாக்சியை தடைசெய்ய வேண்டும், பேட்ஜ் உரிமம் பெறாமல் வணிக வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்கள் அரசிடம் கேட்டுக்கொள்கின்றனர்.