நிறம் மாறி மாசு படிந்து வருகிற ஒகேனக்கல் குடிநீரை சுத்திகரித்து, பாதுகாப்பாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம் தருமபுரி கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ்.தேவராஜன், துணைச் செயலர்கள் ஜெ.பிரதாபன், காசி தமிழ்குமரன், செயற்குழு உறுப்பினர்கள் மாதேஸ்வரன், இ.பி.புகழேந்தி உள்ளிட்டோர் பேசினர்.

இந்தக் கூட்டத்தில், கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் விநியோகிக்கப்படும் ஒகேனக்கல் குடிநீர் நிறம் மாறி, கலங்கலாக மாசு படிந்து வருகிறது. எனவே, உரிய முறையில் சுத்திகரித்து, பாதுகாப்புடன் ஒகேனக்கல் குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ஆம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், அதேபோல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் வருகிற அக்டோபர் 17 மற்றும் 18-ஆம் தேதி நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் கட்சியினரை திரளாக பங்கேற்க செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.