எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் மூலம் இழப்பீடு வழங்கப்படும் என கப்பல் போக்குவரத்துறை இயக்குனர் மாலினி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 28-ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்து கடற்கரை பகுதி எண்ணெய் படலமாக காட்சியளித்தது.

இதையடுத்து கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே எண்ணெய் கசிவால் பாதிப்படைந்த மீனவர்களுக்கு இழப்பீடு மற்றும் விசாரணை குறித்து சோமசுந்தரம் என்பவர் வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கு விசாரணையில் எண்ணெய் கசிவு குறித்து மத்திய அரசு நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என பசுமை தீர்பாயம் உத்தவு பிரபித்தது. மேலும் கப்பல் போக்குவரத்துத் துறை, சுற்றுசூழல் துறை, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியன பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், கப்பல் போக்குவரத்துத் துறை இயக்குனர் மாலினி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கப்பல் விபத்து குறித்து விளக்கமளித்தார். அப்போது, சேதமடைந்த கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் பாதுகாப்பாக எண்ணூர் துறைமுகத்தில் இறக்கப்பட்டதாகவும், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் மூலம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
