எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல்கள் மோதியதில், எண்ணெய்ப் படலம் கடலில் கசிந்தது தொடர்பாக, விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று மத்திய கப்பல்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதின்கட்கரி, கடலில் கலந்த எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும், தன்னார்வ தொண்டு அமைப்பினரும் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைக்குழு அமைக்கப்படும் என்றும், அதன் அறிக்கை கிடைத்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கட்கரி மேலும் தெரிவித்தார்.
கடந்த மாதம் 28-ம் தேதி மும்பையில் இருந்து சென்னைக்கு கச்சா எண்ணெய் ஏற்றிவந்த கப்பலும், எரிவாயுவை இறக்கிவிட்டு சென்னையில் இருந்து புறப்பட்ட கப்பலும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து, எண்ணெய் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்தது.

இதனால், எண்ணூர் துறைமுகம் மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் கடற்பரப்பில் எண்ணெய்ப் படலம் படர்ந்துள்ளது. அதனை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதில், காவல்துறை, தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்புத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
