கப்பல்கள் மோதியதால் கடலில் கொட்டிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் 50% முடிவடைந்துள்ளது. மனித உழைப்பால் மட்டுமே அகற்ற முடியும் என்பதால் மேலும் தன்னார்வ இளைஞர்கள் இதில் உதவ வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்துக்கு உள்பட்ட கடலோரப் பகுதியான காட்டுப்பள்ளியில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் அமைந்துள்ளது.
வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து எரிவாயு, நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கப்பல்கள் மூலம் காமராஜர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.

இதே போல் தமிழகத்தில் தயாரிக்கப்படும் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
காமராஜர் துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் எம்.டி.பிடபுள்யூ மாப்பிள் என்ற கப்பல் சமையல் எரிவாயு ஏற்றிக் கொண்டு விசாகபட்டினம் நோக்கி புறப்பட்டது.
அதேபோல் பெட்ரோலிய ஆயில் ஏற்றிய எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
துறைமுகத்தின் நுழைவு கால்வாயில் வந்து கொண்டிருந்தபோது இரு கப்பல்களும் நேருக்கு நேர் மோதின. இதனையடுத்து இழுவை கப்பல்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.

ஆனால் டான் காஞ்சிபுரம் கப்பலில் உடைப்பு ஏற்ப்பட்டு கொட்டிய எண்ணெய் கடல் நீரில் ஒரு அடி உயரத்திற்கு திட்டாக படர்ந்து பரவ ஆரம்பித்தது .
அதை பிரித்து எடுக்கும் பணியில் கடலோர காவல் படையினர் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்களும் ஈடுபட்டனர். 33 டன் ஆயில் கடலில் கொட்டியதாக கூறப்பட்டது. அது பெரிய படலம் போல் ப்டர்ந்து கடல் நீரில் பரவியது.

பணியாளர்களே நேரடியாக எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். கழிவு எண்னெயை பிரித்து எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் எண்ணெய் படலம் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவி வருகிறது. அது மேலும் மஹாபலிபுரம் கடற்கரை வரை பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய் கடலில் பரவிய காரணத்தால் கடலில் உள்ள உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன. இதுவரை நூற்றுக்கும் மேற்ப்பட்ட உலகின் அரிய வகை ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன.
கடற்கரை ஓரங்களிலும் மணல் திட்டுக்களிலும் எண்ணெய் படலம் அதிகளவில் ஒதுங்கியுள்ளதால் கடல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது. சென்னைக் கடலில் பிடிக்கும் மீன்கள் மூலம் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடலில் வலையையை வீசினால் அதிலுள்ள எண்ணெய் படலத்தால் வலைகள் பாதிக்கப்பட்டு உப்யோகமில்லாமல் போவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வலைகள் எதற்கும் உபயோகமில்லாமல் போய் விட்டதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பிடித்து வரப்படும் மீன்களையும் பொதுமக்கள் வாங்க தயங்குகின்றனர். இதனால் மீன் பிடி தொழிலே பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

கடலில் கலந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்ற மனித உழைப்பால் மட்டுமே முடியும் என்பதால் வாட்ஸ் அப் இணையதளம் மூலம் இளைஞர்களை அழைக்கும் பணியில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இதுவரை துறைமுக பணியாளர்கள் , கடலோர காவல் படையினர் , தொண்டு நிறுவன ஊழியர்கள் என சுமார் ஆயிரம் பேர் வரை எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 15 டன் எண்ணெய் படலம் அகற்றப்பட்டுள்ளது.
மேலும் 20 டன்கள் வரை எண்ணெய் படலம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்காக தனி கட்டுப்பட்டறையை துறைமுக கழகமும் கடலோர காவல்படையும் இணைந்து துவக்கி உள்ளது.
