எண்ணூர் அருகே கப்பல்கள் மோதியதால் கடலில் கலந்துள்ள எண்ணை படலத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவான்மியூர் வரை கடலில் எண்ணைப் படலம் மிதப்பதால் கடந்த 5 நாட்களாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு தவித்து வருகின்றனர்.

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து, கடந்த 28ஆம் தேதி விசாகப்பட்டினம் நோக்கி எரிவாயு
நிரப்பிய கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்த போது, மும்பையில் இருந்துதுறைமுகம் நோக்கி வந்த எண்ணை கப்பலுடன் மோதியது.
இதனால், கப்பலில் இருந்து பல ஆயிரம் டன் எண்ணைய் கடலில் கலந்தது.

இது, தற்போது மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை வரை எண்ணெய் படலமாக காட்சி அளிக்கிறது.
இதன்காரணமாக, கடல் நீர் மாசடைந்துள்ளதால், மீன்கள், ஆமைகள் இறந்து மிதக்கின்றன. கடலில் படர்ந்துள்ள
எண்ணெய் படலத்தை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இருப்பினும், கடல் நீரில் கலந்த எண்ணெய்யை முழுமையாக அகற்ற காலதாமதம் ஆகும் என கூறப்படுகிறது.
இதனால், படகுகள், வலைகள் சேதமடைந்துள்ளதாகவும், 5 நாட்களாக கடலுக்கு செல்ல முடியாமல் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பொது மக்கள் மீனகள் வாங்க தயங்கி வருகின்றனர். எண்ணெய் படலத்தால் மீன்கள்
பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொது மக்கள் அச்சமடைந்துள்ளதால் மீன்கள் விற்பனையும் சரிந்துள்ளது.
