தர்மபுரி,

ஏரிகள், கால்வாய்களை பொதுமக்களின் பங்களிப்புடன், தூர்வாரச் சென்றால் அதிகாரிகள் என்னைத் தடுக்கிறார்கள் என்று தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈசல்பட்டி, பட்டகப்பட்டி, ஓமல்நத்தம், ஏலகிரி, கொட்டாவூர், தண்டுகாரன்பட்டி உள்பட 25–க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாட்டாளி இளைஞர் சங்க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி. சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்தார்.

அப்போது ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை வழங்கினர். மனுக்களைப் பெற்றுக் கொண்ட அவர் சம்பந்தப்பட்ட துறைக்கு அவற்றை அனுப்பி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து பாளையம்புதூரில் விவசாயிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும் போது, ‘எனது தலைமையில் பொதுமக்களின் பங்களிப்புடன், ஏரிகளை தூர்வாரச் சென்றால் அதிகாரிகள் தடுக்கிறார்கள். மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும். பருவமழைக்கு முன்பாக ஏரிகளில் வளர்ந்துள்ள கருவேலமரங்கள் மற்றும் முட்புதர்களை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் விவசாயிகள், பொதுமக்களை திரட்டி தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

இந்தச் சுற்றுப் பயணத்தின்போது ஏலகிரியில் ரூ.2 இலட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி. பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் சாந்தமூர்த்தி, தமிழ்நாடு உழவர் பேரியக்க செயலாளர் வேலுச்சாமி, மாநில துணைத்தலைவர்கள் பாடிசெல்வம், அரசாங்கம், மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன், மாவட்ட தலைவர் மதியழகன், மாநில செயற்குழு உறுப்பினர் வணங்காமுடி, பசுமை தாயகம் மாவட்ட அமைப்பாளர் மாது, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் வெங்கடேஸ்வரன், முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி, இளைஞர் சங்க மாநில செயலாளர் முருகசாமி, ஒன்றிய நிர்வாகிகள் காமராஜ், மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.