திருப்பூர்

திருப்பூரில் தூங்காவியில் உள்ள பொது குடிநீர் குழாயில் பல ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது. ஆனால், மக்கள் போராட்டத்தை கையிலெடுத்த சில மணிநேரங்களில் அதிகாரிகள் குடிநீர் விநியோகத்தை தொடர்ந்தனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் தூங்காவியில் கடந்த சில ஆண்டுகளாக பொதுக் குடிநீர் குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. 

இதனைக் கண்டித்து மக்கள் தூங்காவி ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெற்றுக் குடங்களுடன் முற்றுகையிட்டனர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள், "தூங்காவி ஊராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக பொது குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்வதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தும், நேரடியாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

நாள்தோறும் வந்த குடிநீர் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை வந்தது. பின்னர் வாரத்திற்கு ஒருமுறை, பின்னர் மாதத்திற்கு ஒருமுறை என படிப்படியாக குடிநீர் விநியோகத்தை முற்றிலும் நிறுத்திவிட்டனர்.

கடந்த பல ஆண்டுகளாக வீட்டு குடிநீர் இணைப்பில் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே, எங்களுக்கு தற்காலிகமாக தண்ணீர் தொட்டி அமைத்து ஆழ்குழாய் மூலமாக குடிநீர் வழங்க வேண்டும்" என்று கூறினர்.

பின்னர் சுமார் 4 மணி நேரத்திற்குள் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்கணேஷ்மாலா நடவடிக்கையால் 9-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் குடிநீர் திடீரென விநியோகம் செய்யப்பட்டது. 

பல ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யாத பொது குடிநீர் குழாய்களில் நேற்று நடைப்பெற்ற போராட்டத்தை அடுத்து உடனே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.