செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மணப்பாக்கம் வரையில் உள்ள  கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கான மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை உடனடியாக துண்டிக்க வேண்டும் என்று அரசுத் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வி.பி.ஆர்.மேனன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016 தொடர்ந்த வழக்கில், " செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மணப்பாக்கம் வரை செல்லும் கால்வாயின் இருபுறமும் பலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களைக் கட்டியுள்ளனர். இதனால், மழைக்காலத்தில் வெள்ள ஆபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, இந்த கால்வாய் பகுதியை 64 பேர் ஆக்கிரமித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்று மனுதாரர் தெரிவித்தார்.

அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், " ஏற்கனவே 64 ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை அப்புறப்படுத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் உத்தரவு 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் அங்கேயே உள்ளனர். ஏற்கனவே, நீர்நிலைகள் மற்றும் பொதுப்பயன்பாட்டுக்கான திறந்தவெளி நிலங்களில் ஆக்கிரமிப்பு இருக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது.

எனவே, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மணப்பாக்கம் வரையில் கால்வாய் இருபுறம் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் உள்ள மின் இணைப்பையும், குடிநீர் இணைப்பையும் துண்டிக்கவேண்டும். இந்த நடவடிக்கை குறித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்தும் வரும் ஜனவரி 10ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் " என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.