கர்நாடகாவில் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் 55 ஆயிரம் கன நீர் ஒகேனக்கல் அருவிகளை மூழ்கடித்து வெள்ளை, வெளேரென பொங்கிப் பாய்ந்து வருவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. கிட்டத்திட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் இது போன்று ஒகேனக்கல் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 37 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளதால், அணையின் நீர்மட்டம் 73 அடியை எட்டியது. கடந்த 4 நாட்களில் 10 அடி வரை உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் உள்பட முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டிவிடும்  நிலையில் உள்ளன. இதன் காரணமாக இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து தற்போது வினாடிக்கு 53,768 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து, மேட்டூர் அணைக்கு வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காவிரியில் திறந்து விடப்படும் இந்த தண்ணீர்  பிலிகுண்டுவை வந்தடைந்து பின்னர் தற்போது தற்போது  ஒகேனக்கலில் ஆர்ப்ரித்துக் கொட்டுகிறது. தற்போது 37 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.

இதையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 9-ந் தேதி 63.72 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 10-ந் தேதி 65.15 அடியாக உயர்ந்தது. அது நேற்று முன்தினம் 70 அடியாக உயர்ந்தது. அது நேற்று மாலை நிலவரப்படி 73 அடியாக இருந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73 அடியை எட்டியதால் அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள வீரபத்திரன் கோவில், ராஜா கோட்டை, ஜலகண்டேஸ்வரர் ஆலய முகப்பு, நந்தி சிலை ஆகியவை தண்ணீரில் முழுமையாக மூழ்கின. தொடர்ந்து அணைக்கு அதிக நீர் வருவதால் கிறிஸ்தவ கோவில் கோபுரமும் விரைவில் மூழ்கும் நிலையில் உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து கிடு கிடுவென உயர்ந்து வருவதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.