அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைந்தால் தான் அக்கட்சி தேர்தலில் வெற்றி பெறுமென முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளின் படியே கட்சி செயல்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியே வந்து விட்டோம். உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னை அழைத்தபோது தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து தெரிவித்து வந்தேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு இயக்கத்திற்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகளில் வருகின்றன. இது முற்றிலும் பொய்யான தகவல்.
எங்களைப் பொறுத்தவரையில் அதிமுகவில் பிரிந்து இருக்கின்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் அப்போது தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும். எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளின்படி தான் எம்ஜிஆர், ஜெயலலிதா செயல்பட்டார்கள். அந்த சட்ட விதிகளை தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளார்கள்.
அதிமுக பொதுச்செயலாளரை அடிப்படை தொண்டர்கள் வாக்களித்து தேர்வு மூலம் தேர்வு செய்ய படவேண்டும் என்பதே சட்ட விதி. அது இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த சட்ட விதிகளை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி தான் நாங்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி இருக்கிறோம். எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளை காப்பாற்றுவதற்கு எங்களது சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்
எம்ஜிஆர் தமிழகத்திற்கு செய்த புகழை மறைக்கும் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அது கடும் கண்டனத்திற்கு உரியது. தவறு செய்தவர்களுக்கு தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பதில் அளித்துச் சென்றார்.


