சில ஆண்டுகளுக்கு முன்பு காட்டுப்பகுதியாக இருந்து, இப்போது வீட்டுப்பகுதியாக மாறிவருகிறது கற்பகாநகர். இது புதுக்கோட்டை நகராட்சி 40 வார்டுக்குட்பட்ட பகுதியில் இருக்கிறது.

இந்த பகுதியில் இருக்கும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து, வீட்டின் முன்பு சுவர் எழுப்பியுள்ளனர். இதனால், இந்த சாலையில் அகலம் சுருங்கிக் கொண்டே வருகிறது. சாலையை ஆக்கிரமித்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் கற்பகாநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜாராம் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் பொக்ளின் எந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

கற்பகாநகரில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டின் காம்பவுண்ட் சுவர்களை இடித்து, தரைமட்டம் ஆக்கினர்.

பொதுமக்களின் வேண்டுகோளின்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதையொட்டி அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் நகர காவல்துறையினர் ஈடுபட்டனர்.

வழக்குத் தொடுத்து தீர்ப்பின் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.