மனிதனின் மூன்றாவது கரமாக, ஆறாவது விரலாக தற்போது மாறிவிட்டன கைபேசிகள். செப்புச் சாமான் வைத்து விளையாட வேண்டிய பிஞ்சுக் கரங்கள் கூட செல்போன் வைத்துதான் தற்போது விளையாடுகின்றனர். 

தொலைதொடர்பு தொழில்நுட்பத்தின் இந்த அசுர வளர்ச்சியானது நம்மை உயர்த்திப் பிடித்தாலும் கூட சில நேரங்களில் மனித நேயத்திலிருந்தும் , கடமையிலிருந்தும்  வெகுதூரம் நகர்த்தி நிறுத்துகிறது. 

அதிலும் சில துறையை சேர்ந்தவர்கள் பணி நேரத்தின் போது தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவது அருகில் இருப்பவர்களை குலை நடுங்க வைக்கிறது. 

பேருந்தின் கியர் மாற்றும் போது ஒரு கையிலிருந்து மறு கைக்கு செல்போனை மாற்றி மாற்றி பேசுகின்றனர் சில பேருந்து ஓட்டுனர்கள்.

தன் பொறுப்பில் இருக்கும் 65 உயிர்களை பற்றி கவலையோ அக்கறையோ அவர்களிடம் இருப்பதில்லை.
சாக்பீஸை பிடித்த கை கரும்பலகையில் மேய்ந்து கொண்டிருக்க மற்றொரு கரமோ செல்போனை காதுக்கு கொடுத்துக் கொண்டிருப்பது ஆசிரியருக்கு அழகல்ல.

இதற்கு இணையானதுதான் மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் வேலை நேரத்தில் செல்போனில் சொக்கிக் கிடப்பது. 
இது தொடர்பாக சமீபத்தில் வாட்ஸ் ஆப்பில் சில புகைப்படங்கள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. 

அது... வேலை நேரத்தில் மொபைலில் மூழ்கி கிடக்கும் செவிலியர்களை படம் பிடித்துக் காட்டுகிறது. அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட படங்கள் என்று அதிலுள்ள விளக்கங்கள் சொல்கின்றன. 

பொதுவார்டு ஒன்றில் ஒரு நர்ஸ் ஒருவர் ஒரு நோயாளிக்கு இரத்த பரிசோதனை செய்து கொண்டிருக்க அவர் அருகில் மொபைலில் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார் மற்றொரு நர்ஸ். மேலும் அதே வார்டில் தூரத்தில் சில நர்ஸ்கள் குரூப்பாக உட்கார்ந்து மொபைலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொன்றில் நோயாளி இருக்கும் படுக்கைக்கு அருகில் நின்று செல்ஃபி எடுக்கிறார்கள் இரண்டு செவிலியர்கள், மற்றொன்றிலோ ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டிருக்கும் பெண் நோயாளிக்கு அருகில் நின்றபடி டாக்டர் ஒருவரே மொபைலை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். 

சென்னையா அல்லது வெளியூரோ எந்த ஊராக இருந்தால் என்ன? உயிரின் மதிப்பு எல்லா மண்ணிலும் ஒன்றுதானே! தன்னை நம்பி ஊசி போட்டுக் கொள்ளும், ட்ரிப்ஸ் ஏற்றிக் கொள்ளும் நோயாளிகளின் உயிர் விஷயத்தில் நர்ஸ்கள் இப்படி அலட்சியம் காட்டலாமா? 

பிரஷர் செக் செய்யும் நேரத்தில் ஒரு மெஸேஜுக்கு பதில் சொல்லும் ஆர்வத்தில் நோயாளியின் பிரஷர் அளவை தவறுதலாக அதிகமாக சொல்லிவிட்டால் என்னவாகும்? பதற்றத்தில் அவருக்கு உண்மையிலேயே பி.பி. எகிறிவிடாதா? 

சுகர் செக் செய்து ரிப்போர்ட் எழுதும் நேரத்தில் மொபைல் பேச்சால் கொஞ்சம் பிசகினாலும் அளவு அதிகரித்தோ அல்லது குறைத்தோ எழுதப்பட்டால் என்னவாகும்? இதை நம்பி டாக்டரும் நிச்சயம் தவறான பவரில்தானே மாத்திரையை பரிந்துரைப்பார்!

செவிலியர்களும் மனிதர்கள்தான். எல்லா ஆசைகளும், உணர்வுகளும் உள்ளவர்கள்தான். அவர்களுக்கும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் காலநேரம் என்று ஒன்ரு இருக்கிறதே! இனி கடமை நேரத்திலாவது மொபைல் போனை தவிர்க்கலாமே!!