பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சீமான் இன்று இரவு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். 

Seeman appears before Valasaravakkam police station: விஜயலட்சுமி வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று ஆஜரானார். இதனால் சென்னையில் பரபரப்பு நிலவியது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்பு புகாரை வாபஸ் பெற்ற அவர் மீண்டும் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சீமான் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராகி இருந்த சீமான், தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதே வேளையில் போலீஸ் வழக்கை ரத்து செய்யக்கூடாது என தெரிவித்து இருந்தது. இந்த வழக்கில் சீமான் தரப்பு மற்றும் போலீசின் வாதங்களை கேட்ட உயர்நீதிமனற நீதிபதி இளந்திரையன், ''விஜயலட்சுமி சீமான் மீதான வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்றரீதியில் இந்த வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது'' என்று கூறி சீமான் மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டார். 

மேலும் சீமான் மீதான வழக்கை 12 மாத காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் சீமான் நேற்று ஆஜாராக போலீஸ் சம்மன் அனுப்பினார்கள். ஆனால் அவர் நேற்று நேரில் ஆஜராகவில்லை. இதனால் ''நாளை கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லையெனில் கைது செய்ய நேரிடும்'' என்று சீமான் வீட்டில் போலீசார் நோட்டீஸ் ஒட்டினார்கள்.

இந்த ஓட்டிசை சீமான் வீட்டு காவலாளியான முன்னாள் ராணுவ அதிகாரி கிழித்ததால் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து சீமான் வீட்டுக்கு சென்ற போலீசார், அந்த காவலாளி உள்பட 2 பேரை கைது செய்தனர். காவலாளி துபாக்கியை காட்டி மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் உண்டானது.

இந்நிலையில், சீமான் விஜயலட்சுமி வழக்கு தொடர்பாக சென்னை வளசரவாகக்ம் காவல் நிலையத்தில் இன்று ஆஜரானார். வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டலில் இருந்து காரில் வந்த சீமான் போலீஸ் நிலையத்தில் இன்று இரவு ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக 53 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதிலை பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வளசரவாக்கத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. வளசரவாக்கம் காவல் நிலையத்தை சுற்றி 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். வளசரவாக்கம் காவல் நிலைய பகுதியில் குவிந்திருந்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் போலீசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.