Now there is trouble for swimming pool
தனியார் நீச்சல் குளங்கள் மூடுவது குறித்து விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கை ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தன் பிள்ளைகள் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்களின் ஏக்கமாக உள்ளது.
அது மட்டுமல்லாது நீச்சல் கற்றுக் கொண்டால் ஆபத்து தருணங்களில் நம்மை காப்பாற்றும் என்றும் உடலை பலப்படுத்தும் என்பதாலேயே நீச்சல் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால், நீச்சல் பயிற்சி பெற தங்கள் பிள்ளைகளை, பெற்றோர்கள் அருகில் இருக்கும் நீச்சல் பயிற்சி குளங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
மக்களின் ஆர்வத்தை அறிந்து கொண்ட சிலர் நீச்சல் பயிற்சி மையங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற தனியார் நீச்சல் பயிற்சி மையங்களில், பயிற்சி பெற்ற நீச்சல் வீரரால் தங்கள் பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்களும் சேர்த்து விடுகின்றனர்.
ஆனால், சில தனியார் நீச்சல் மையங்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி நீச்சல் பயிற்சி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் நடப்பதாகவும் புகார்கள் எழுகின்றன.
சென்ற மாதம் கூட திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் நீச்சல் குளம் ஒன்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த இளமாறன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், அனுமதி பெறாமல் இயங்கும் நீச்சல் குளங்களால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்றும், இதுபோன்ற நீச்சல் குளங்களை மூட வேண்டும் என்றும் கூறி கூறியிருந்தார். மேலும், பாலியல் தொல்லை நடப்பதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனுமதி பெறாமல் இயங்கும் நீச்சல் குளங்களை மூடுவது பற்றி விளக்கம் தேவை என்றும், தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது. பின்னர், இந்த வழக்கை ஜூலை 18 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
