காயிதே மில்லத் கல்லூரி விடுதியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, கல்லூரி நிர்வாகத்துக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை காயிதே மில்லத் கல்லூரியின் விடுதியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட மாணவிகள் 89 பேருக்கு வாந்தி மயக்கம் எற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கல்லூரி விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவை உணவு பாதுகாப்பு துறை சோதனையிட்டது. உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய ஆய்வில் ஒப்பந்ததாரரின் உரிமம் 2 மாதங்களுக்கு முன்பே முடிந்தது தெரியவந்தது.

மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவில், பல்லி விழுந்த உணவு பரிமாறப்பட்டதால் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காயிதே மில்லத் கல்லூரி நிர்வாகத்துக்கு உணவுப் பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உணவகத்தின் உரிமம் சரிபார்த்தல், சுகாதாரமான குடிநீர் வழங்குதல், சமையல் அறையில் புகைபோக்கி அமைத்தல் உள்ளிட்ட 9 நிபந்தனைகளை, ஒரு வாரத்தில் சரி செய்ய வேண்டும் என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.