கரூர்

நீட் தேர்வு விவகாரத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது.  சமூக ஊடகங்களீல் வெளியாகும் செய்திகள் தவறானது என்று முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், இன்னாள் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சருமான மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள சேரர் அகழ்வைப்பகம் மற்றும் அரசு அருங்காட்சியகம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் வருகைத் தந்தார்.

அங்கு ஆய்வு நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், “கரூர் அரசு அருங்காட்சியகத்தில் இரும்பு யுகம் முதல் 19-ஆம் நூற்றாண்டு காலம் வரையிலான ஓலைச் சுவடிகள் வைக்கப்பட்டுள்ளன.

கரூர் சங்க கால நாகரீகத்துடன் திகழ்ந்ததை இங்குள்ள கண்டுபிடிப்புகள் தெளிவாக எடுத்து உரைக்கின்றன.  

இந்தியாவிலேயே மிகப் பெரிய அருங்காட்சியகங்களில் இரண்டாம் இடத்தில் உள்ள எக்மோர் அருங்காட்சியகம் ரூ.11 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள 45 அருங்காட்சியகங்களும் தரம் உயர்த்தப்பட உள்ளன. 

தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டும் என நான் கையெழுத்திட்டதாகக் கூறுவது தவறான கருத்து.  பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது, அரசுப் பள்ளி மாணவர்களைத் தயார்படுத்த சிறப்புப் பயிற்சி வகுப்புத் தொடங்க முயற்சி எடுத்தேன். 

பின்னர், உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான நிலைப்பாடாகி விடுமோ? என்ற அச்சத்தில், அந்த முயற்சியையும் கைவிட்டுவிட்டேன். நீட் தேர்வு விவகாரத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது.  சமூக ஊடகச் செய்திகள் தவறானது.

மதுரை கீழடி அகழாய்வில் மொகஞ்சதாரோ, ஹரப்பா, சிந்து சமவெளி நாகரீகங்களுக்கு இணையானது தமிழர் நாகரீகம் எனத் தெரிய வருகிறது. 

தமிழகத்தில் 800-க்கும் மேற்பட்ட கல்வெட்டு, படிமங்கள் உள்ளன. இதில் 91 மட்டும் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.