ஸ்ரீபெரும்புதூ ர் பகுதியில் வடமாநில வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்ரம்பாக்கம் காலனி பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் கிடந்தது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். சடலமாக கிடந்த வாலிபருக்கு சுமார் 25 வயது இருக்கலாம். தலை மற்றும் வாயில் பலத்த அரிவாள் வெட்டு இருந்தது. அவர் வடமாநிலத்தை சேர்ந்தவரை போல் உள்ளது. இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலமாக கிடந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட முன் விரோதமா, கள்ளக்காதல் விவகாரமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கில் வசிக்கின்றனர். 6 மாதத்துக்கு ஒருமுறை வீட்டை காலி செய்து வேறு பகுதிக்கு செல்கின்றனர்.

அவர்களிடம் கேட்கும்போது, வேறு கம்பெனியில் கான்ட்ராக்ட் கிடைத்துள்ளது என கூறுகிறார்கள். இதுபோல் மாறும்போது, யாராவது பெண்களையும் அழைத்து செல்கிறார்கள். அந்த பெண்ணை மனைவி என கூறுகின்றனர். இங்கு வீடு வைத்து இருப்பவர்கள் பணம் வந்தால் போதும் என நினைத்து, வடமாநில வாலிபர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கின்றனர். அவர்களை பற்றி எதையும் விசாரிப்பதில்லை.

இதனாலேயே இதுபோன்ற கொலை சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. கடந்த 4 நாட்களுக்கு முன் ஒரு இளம்பெண் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டார். அவருடன் வந்த வாலிபரை, போலீசார் இதுவரை பிடிக்கவில்லை. எனவே, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வசிக்கும் வடமாநில வாலிபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்க வேண்டும். அவர்கள் பற்றி விவரம் கேட்காமல் வாடகைக்கு வீடு கொடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் குறையும் என்றனர்.