North indian killed by beat People are angry to think child kidnap gang ...
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் குழந்தைகளை கடத்த வந்ததாக நினைத்து ஆத்திரமடைந்து பொதுமக்கள் வடமாநில இளைஞரை ரத்தம் சொட்ட சொட்ட அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வடமாநில கும்பல் களமிறங்கியுள்ளது என்று கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் மாரியம்மன் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தவர்களை குழந்தைகளை கடத்த வந்த கும்பல் என நினைத்து ஊர் பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் ருக்மணி என்ற பாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், வடமாநிலத்தவரை கடத்தல் கும்பல் என்று நினைத்து கம்பத்தில் கட்டிவைத்து அடிப்பது, சந்தேகப்படும்படி இருக்கும் வடமாநிலத்தவரை ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தாக்கி பலத்த காயம் ஏற்படுத்துவது போன்ற செயல்கள் நடைப்பெற்று வருகிறது.
காவல்துறை தரப்பில் சார்பில் கடத்தல் கும்பல் எதுவும் தமிழகத்தில் நுழையவில்லை. ஒருவேள சந்தேகப்படும்படி யாராவது இருந்தால் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டுமே தவிர தாக்குதலில் ஈடுபட கூடாது என்று தெரிவித்தனர். ஆனால், இதுகுறித்து போதுமான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை குழந்தைகளை கடத்த வந்தவர் என்று நினைத்து பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்னல்வாடி அருகே குடிசாதனபள்ளி பக்கமாக நேற்று வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு நின்ற பொதுமக்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்த மூவரையும் நீங்கள் யார்? இங்கு ஏன் சுற்றி திரிகிறீர்கள்? என விசாரித்தனர். ஆனால், அந்த மூவரும் எதுவும் கூறாமல் அங்கிருந்து தப்பித்துச் செல்வதிலேயே குறியாக இருந்தனர்.
இதனால் அவர்களை குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என நினைத்து மூவரையும் பொதுமக்கள் தாக்க ஆரம்பித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அதில் இருவர் பொதுமக்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார்.
சிக்கிய அந்த இளைஞரை பிடித்து கை, கால்களை கட்டிபோட்டு பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். பொதுமக்கள் அவரை அடித்து உதைத்தனர். இதில் அவருக்கு காது, மூக்கு, வாய் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரத்தம் கொட்டியது.
இதனையடுத்து அவர் மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓசூர் நகர காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன்பின்னர் இறந்தவரின் உடலை உடற்கூராய்வுக்காக காவலாளர்கள் அனுப்பி வைத்தனர். இறந்த இளைஞருக்கு 30 வயது இருக்கலாம் எனவும், அவர் ஓசூரில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வந்திருக்கலாம் எனவும் காவலாளர்கள் கருதுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவலாளர்கள் வழக்குப்பதிந்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகளை கடத்த வந்ததாக நினைத்து வடமாநில இளைஞரை பொதுமக்கள் அடித்துக்கொன்ற சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
