அரியலூர் 

வடமாநில குழந்தை கடத்தல் கும்பல் அரியலூர், பெரம்பலூரி மாவட்டங்களில் அதிகமாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளால் பொதுமக்கள் நிம்மதியின்றி எந்நேரமும் அச்சத்தோடே இருக்கின்றனர். 

வடமாநிலத்தை சேர்ந்த குழந்தை கடத்தும் கும்பலின் நடமாட்டம் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் அதிகமாக இருக்கிறது என்று கடந்த சில மாதங்களாக வதந்தி பரவி கொண்டு வருகிறது. 

சமூக வலைத்தளங்களில் பரவும் இதுபோன்ற வதந்திகளை நம்பி சந்தேகப்படும் வடமாநிலத்தவர்களை துவைத்து எடுத்தனர் நம்ம ஊரு மக்கள். இதில் சிலர் உயிர் இழந்தும் இருக்கிறார்கள்.

அதன்பின்னர், காவல்துறை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கொடுத்த விழிப்புணர்வின் மூலமும், சந்தேகப்படும் வடமாநிலத்தவர்களை காவலாளர்களிடம் சொன்னால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் எச்சரித்தனர்.

இதனால், மக்கள் தங்கள் ஊரில் அநாவசியமாக சுற்றித் திரியும் வடமாநில இளைஞர்களாய் பிடித்து வைத்து காவலாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வட மாநில கும்பலின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்று மீண்டும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வைரலாக பரவி வருகிறது.

இதேபோல, வெளி மாநிலங்களில் குழந்தைகளை கடத்தி, அவர்களின் உடல் உறுப்புகளை அறுத்து போடுவது போன்ற வீடியோ காட்சிகள் தமிழகத்தில் நடப்பது போன்று சித்தரித்து பல வீடியோ பதிவுகள், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

சமூக வலைத்தளங்களில், "செயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், செந்துறை, அரியலூர் போன்ற நகரங்களை சுற்றிலும் குழந்தைகளை கடத்தும் கும்பல் சூழ்ந்துள்ளது. அந்த மர்ம நபர்கள் எங்கேயும் எப்போதும் குழந்தைகளை கடத்தி கொலை செய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில குழந்தைகளைகூட கொன்றுவிட்டனர். மிகவும் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்" போன்ற வாசகங்கள் அடங்கிய தகவல்கள் வைரலாக பரவி வருகிறது. 

சமூக வலைத்தளங்களில் இந்த பதிவினை பார்த்து, பொதுமக்கள் வட மாநிலங்களை சேர்ந்தவர்களை பார்த்தாலே குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகக்கின்றனர். 

இந்த நிலையில் அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் அருகே உள்ள கோரியம்பட்டி கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் மனநோயாளியை குழந்தை கடத்தல்காரர் என நினைத்து பொதுமக்கள் 10 பேர் சேர்ந்து அடித்து துன்புறுத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து செயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமத்தில் ஆண், பெண் இருவரையும் குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து சந்தேகத்தின்பேரில் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதைப்போல பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குழந்தை கடத்தல்காரர்கள் என்று நினைத்து பொதுமக்கள் வட மாநிலங்களை சேர்ந்தவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து வருகின்றார்கள். 

எனவ, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் குழந்தை கடத்தல்காரர்கள் ஊடுருவி இருப்பது உண்மைதானா? இதுவரை இந்த மாவட்டங்களில் எங்கேயாவது குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளார்களா? என்பதை மக்களிடம் காவலாளர்கள் தெளிவுப்படுத்த வேண்டும். 

இது தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது மாவட்ட நிர்வாகமும், காவலாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் நடந்த பகுதிகளில் காவலாளர்கள் ஆட்டோக்களில் சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். மேலும், காவலாளர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.