North indian around perambalur child kidnapper people inquiry ...
பெரம்பலூர்
பெரம்பலூர் ஒற்றை ஆளாய் சுற்றி திரிந்த வடமாநில வாலிபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், அவர் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவராக இருப்பாரோ? என்று சந்தேகப்பட்டு அவரிடம் நீண்ட நேரம் விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர், அவரை விடுவித்தனர்.
தமிழகத்தில் வடமாநில குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவி உள்ளது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதனால் பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வடமாநிலத்தவர்களை கும்பலாக பார்த்தாலும் குழந்தை கடத்தல் கும்பல் என்று அச்சப்பட்டு அவர்களை தாக்கிவிட்ட சம்பவங்களிம் இங்கே அரங்கேறியுள்ளது.
சில சமயங்களில் உண்மையான கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டு போலீஸிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். பல சமயங்களில் கடத்தல் கும்பலாக இருக்குமோ என்று சந்தேகித்து தாக்கிவிடுகின்றனர். இதனால் உயிரிழப்பு கூட ஏற்பட்டுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த போலீஸ் தரப்பில் "வடமாநில குழந்தை கடத்தல் கும்பல்' தமிழகத்திற்குள் புகவில்லை என்றும், சமூக வலைதளங்களில் செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
மேலும், சந்தேகப்படும்படி வடமாநிலத்தவர்கள் வந்தால் அவர்களை தாக்குவதற்கு பதிலாக போலீஸ்க்கு தகவல் கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி, கிராம பகுதிகளில் வடமாநிலத்தவர் போல் புதிதாக வரும் நபர்களை பிடித்து போலீசார், அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நொச்சிக்குளம் கிராமத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சுற்றி வந்துள்ளார். அவரைப் பார்த்த பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனே கிராம மக்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரிக்க தொடங்கினர். அந்த வாலிபருக்கு தமிழ் தெரியாததால் பதில் சொல்ல முடியாமல் திணறினார். இதனால் இந்தி தெரிந்த ஒருவரை பொதுமக்கள் அழைத்துவந்து அவரிடம் பேச வைத்தனர்.
இதன்மூலம் அவர் அரியலூரில் கட்டிட வேலை செய்ததாகவும், அது பிடிக்காமல் இந்த கிராம பகுதிக்கு வந்தபோது வழி தெரியாமல் சென்று கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். இதனால் அரியலூரில் கட்டிட வேலை பார்க்கும் கான்ட்ராக்டரிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது அந்த வாலிபர் கூறியது உண்மை என்று தெரியவந்தது.
அதனையடுத்து அவரை வரவழைத்து அவரிடம் அந்த வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
