சல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராடியவர்கள் மீது காவலாளர்கள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

சல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோவையில் ஆறு நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சல்லிக்கட்டுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்தியவர்களை காவலாலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வலுகட்டாயமாக வெளியேற்றினர். வெளியேற மறுத்தவர்களை கைதும் செய்தனர்.

மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் செய்தவர்கள் மீது காவலாளர்கள் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதில் பெண்கள் என்றும் பாராமல் அனைவரையும் அடித்தனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

கோவை முழுவதும் 940 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

இந்த நிலையில், அறவழி போராட்டக்காரர்கள் மீது காவலாளர்களின் அத்துமீறலை கண்டித்து கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தெற்கு தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நேருதாஸ் தலைமை தாங்கினார். நிர்மல்குமார், தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மாவட்ட தலைவர் நேருதாஸ், “தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை காவலாளர்கள் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இதில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். இறந்தவர்களைப் பற்றிய எந்த தகவலையும் வெளியிட மறுக்கிறது அரசு. காவலாளர்கள் தடியடி நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.