non stop heavy rain old man who was asleep was dragged by flood found death ...

திருப்பூர்

திருப்பூரில் இடைவிடாது பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த 70 வயது முதியவர் இழுத்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இதனால் இந்தப் பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு நல்ல மழை பெய்தது. திருப்பூரில் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய இந்த மழை அதிகாலை 3 மணி வரை நீடித்தது. 

அதன்படி, திருப்பூர் மாவட்டம், அவினாசி சிந்தாமணிப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் கருப்பன் (85). இவருடைய மனைவி ரங்கம்மாள் (70). இவர்கள் இருவரும் சொந்தமாக ஆடு வைத்து வளர்த்து வந்தனர். 

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கருப்பன் தனது வீட்டுக்கு வெளியே முற்றத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இரவு மழை அதிகளவில் பெய்ததால், கருப்பன் வீட்டு முற்றத்தின் வழியாக மழை வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த வெள்ளம் அருகில் உள்ள குளத்தை நோக்கி சென்றது.

சுமார் இரண்டு மணியளவில் மழை வெள்ளம் அதிகமானதால் கருப்பன் எழுந்து சத்தம் போட்டார். ஒரு கட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய அவர் இழுத்துச் செல்லப்பட்டார். அதிகாலை 3 மணியளவில் அருகில் உள்ள குளத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது.

அதேபோன்று, திருப்பூர் இரயில்வே மேம்பாலம் அருகே ஹார்வி சாலையில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இந்த வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. 

நேற்று முன்தினம் இரவில் பெய்த மழை காரணமாக தொழிற்பேட்டையில் உள்ள சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. நேரம் செல்ல செல்ல மழைநீர் சாலையோரம் தாழ்வான பகுதிகளில் அமைந்திருந்த பனியன் நிறுவனங்களுக்குள் புகுந்தது.

நிட்டிங் நிறுவனங்கள், உள்நாட்டு ஆடைகளை உற்பத்தி செய்யும் பனியன் நிறுவனங்கள், மின் மோட்டார் நிறுவனம் என 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. பனியன் நிறுவனங்களுக்குள் தண்ணீர் இரண்டு அடிக்கு மேல் தேங்கியது. 

இதனால் அந்த நிறுவனங்களில் ஆடைகளை தயாரித்து சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக இருப்பு வைக்கப்பட்ட பண்டல்கள் மழைநீரில் நனைந்தன. மழைநீருடன் சேறும், சகதியும் பாய்ந்தது. இதனால் ஆடைகளில் சேறு படிந்ததால் முற்றிலும் சேதமானது.

மேலும், நிட்டிங் நிறுவனங்களில் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள எந்திரங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த எந்திரங்கள் பழுதடைந்தன. அங்கு வைக்கப்பட்டு இருந்த மின்மோட்டார்கள் மழைவெள்ளத்தில் மூழ்கி சேதமாயின. மழை நீர் புகுந்ததால் ரூ.2 கோடி மதிப்புள்ள ஆடைகள் சேதமடைந்துள்ளது. 

நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு: 

திருப்பூரில் 90 மில்லி மீட்டரும், பல்லடத்தில் 54 மில்லி மீட்டரும், காங்கேயத்தில் 138 மில்லி மீட்டரும், அவினாசியில் 84 மில்லி மீட்டரும், தாராபுரத்தில் 63 மில்லி மீட்டரும், மூலனூரில் 29 மில்லி மீட்டரும், உடுமலையில் 30 மில்லி மீட்டரும் மழை பதிவானது.