தேனி

தேனி மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், “செயல்படாமல் இருக்கும் ஏ.டி.எம். மையங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி மத்திய அரசிற்கு எதிரான தங்களது போராட்டத்தை நடத்தினர்.

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மோடி அரசு செல்லாது என்று அறிவித்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கையில் நாள்தோறும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பணம் எடுப்பதற்கு கால் கடுக்க நின்று பெரும் சிரமத்தை அடைந்து வருகின்றனர்.

பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்படாமல் பூட்டியேக் கிடப்பதால், பணம் இருக்கும் ஏ.டி.எம். மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அந்த ஏ.டி.எம்களில் இருக்கும் பணமும் சில மணிநேரத்தில் தீர்ந்துவிடுகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேனி மாவட்டத்தில் செயல்படாத ஏ.டி.எம். மையங்களுக்கு மாலை அணிவித்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போராட்டம் நேற்று நடந்தது.

தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கோம்பை, கூடலூர் ஆகிய இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனியில் மதுரை சாலையில் உள்ள கனரா வங்கி ஏ.டிஎம். மையம் தொடர்ந்து பூட்டிக் கிடப்பதால் அந்த மையத்தின் கதவிற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேனி வட்டார செயலாளர் சடையாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், பணப்புழக்கம் சீராக தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.