ஈரோடு

வெண்டிப்பாளையத்தில் 20 நாள்களாக குடிநீர் விநியோகம் இல்லாததாலும், பொது கழிப்பறையிலும் தண்ணீர் இல்லாததாலும் மக்கள் தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம் என்று ஆட்சியரிடம் மனு கொடுக்க வெற்றுக் குடங்களுடன் சென்றனர்.

ஈரோடு மாவட்டம், வெண்டிப்பாளையம் பாபு தோட்டம் பகுதியைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்டப் பெண்கள் கையில் வெற்றுக் குடங்களைத் தூக்கிக் கொண்டு ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

அப்போது அவர்கள், “நாங்கள் ஈரோடு மாநகராட்சி 60–வது வார்டுக்கு உட்பட்ட காந்திபுரம் பாபுதோட்டம் பகுதியில் வசித்து வருகிறோம். இங்கு மாநகராட்சி சார்பில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

தற்போது எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 20 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும் வறட்சி காரணமாக தற்போது ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.

இதனால் எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண்கள், மாணவ – மாணவிகள் என அனைத்துத் தரப்பினரும் குடிநீரின்றி மிகவும் சிரமப்படுகிறோம். மேலும் எங்கள் பகுதியில் உள்ள பொது கழிப்பறையிலும் போதுமான தண்ணீர் வசதி இல்லாததால் கடும் அவதியடைந்து வருகிறோம்.

எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்குக்குச் சென்று தங்களுடைய கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.