No rain after Wednesday!

கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் வரும் புதன்கிழமைக்குப் பிறகு தமிழகத்தில் மழை இருக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரகாலமாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் புதுழச்சேரியிலும் கன மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கனமழை காரணமாக, சென்னை மற்றும் கடலோர மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தல் மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் மழை இருக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை முழுவதும் மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலையில் இருந்து பெய்துவரும் சாரல் மழை தீவிரமடையும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். அதேபோல் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் இன்று மாலை முதல் மழை குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுநாள் வரை வங்கக்கடலில் நீடித்து வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மறைவதாகவும் கூறியுள்ளார். இதனால், தமிழகத்தில் வரும் புதன் கிழமைக்குப் பிறகு மழை இருக்காது என்றும் தாய்லாந்து வளைகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் தற்போது பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புயல் வங்கக்கடலுக்கு வருவதைப் பொறுத்தே தமிழகத்தில் இனி மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.