No problem in bringing the body of Rowdy Sridhar ...!
கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட ரவுடி ஸ்ரீதரின் உடலை தமிழகம் கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள எல்லப்பன் நகரில் வசித்து வந்தார். இவர் மீது கொலை, சாராய வழக்கு, நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பலமுறை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார்.
இதையடுத்து வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். மேலும், அங்கிருந்தே தனது ஆட்களை ஏவி ஆளில்லாத சொத்துகளை அபகரிப்பது, நில உரிமையாளர்களை மிரட்டி குறைந்த விலையில் நிலத்தை வாங்குவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், ஸ்ரீதரின் மகனிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், பல நாட்களாக தலைமறைவாக இருந்த ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டார்.
கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட ரவுடி ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டு வர உத்தரவிடக்கோரி, அவரின் மகள், தனலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ரவுடி ஸ்ரீதரின் உடலை கொண்டு வர அனுமதி அளித்துள்ளது. அது மட்டுமல்லாது பயண ஆவணங்களையும் மத்திய அரசிடம் தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
