no privatisation of ennor harbour....stalin letter to kadgari
இந்திய பொருளாதாரத்தை கட்டமைக்கும் முக்கிய துறைமுகமான எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கக் கூடாது என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
எண்ணூர் துறைமுகம் கடந்த 2001ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இந்தத் துறைமுகம் வளர்ந்துள்ளது. இந்நிலையில், இத்துறைமுகத்தின் பங்குகளை முழுமையாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு துறைமுக ஊழியர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நிதின் கட்கரிக்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்

காமராஜர் துறைமுகம் மாநில பொருளாதாரத்தைக் கட்டமைக்கக் கூடிய முக்கிய இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், இந்தத் துறைமுகம் 2017ம் ஆண்டில் 480 கோடி ரூபாய்க்கும் அதிகமாக லாபத்தை ஈட்டித் தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களுள் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்கும் எண்ணத்தில் இருப்பதாக வந்த தகவலால், தான் கவலையுற்று இருப்பதாக அந்த கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்கும் முடிவு மத்திய அரசின் விஷன் மற்றும் மிஷன் ஆகியவற்றுக்கு எதிராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்குவது மாநில நலனுக்கு எதிரானது என்பதால் அந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்
