அதிமுகவை எந்த கட்சியாலும் எதிர்க்க முடியாது என மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடங்கி வைத்தார். இதையடுத்து, இசை நிகழ்ச்சி, கவியரங்கம், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. தொடர்ந்து, மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக எழுச்சி மாநாட்டின் பிரதான நிகழ்ச்சிகள் மாலையில் தொடங்கின. இதில் கலந்து கொள்வதற்காக மாலை 4 மணியளவில் மாநாட்டு திடலுக்கு எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார்.

மதுரை அதிமுக மாநாட்டில், சட்டம் - ஒழுங்கு, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்காதது உள்ளிட்ட திமுக அரசுக்கு எதிராக 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சித் தமிழர்’ என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாநாட்டில் சிறப்புரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மாவை வணங்கி, பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே, இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் உண்மை விசுவாசமிக்க தொண்டர்களே என கூறி தனது உரையை தொடங்கினார்.

1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுக கட்சியை தோற்றுவித்தார். இன்று அதிமுக பொன்விழா கொண்டாடி 51ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த 51 ஆண்டுகாலத்தில் 31 ஆண்டுகாலம் தமிழ் மண்ணிலே ஆட்சி செய்த பெரிய கட்சி அதிமுக என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சி அதிமுகதான் என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சி காலத்தில் தான் தமிழ்நாடு ஏற்றம் பெற்றது. கடைக்கோடி சாமானியனுக்கும் நன்மை கிடைத்தது. அனைத்து துறைகளிலும் முதன்மை துறையாக செயல்பட்டு காட்டிய அரசு அதிமுக அரசு. மதுரை மண்ணில் எதை தொடங்கினாலும் வெற்றிதான். தொடங்கிய ஆறே மாதத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சி என்றால் அதிமுக தான். அதிமுக-வை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது. எந்த கட்சியாலும் முடியாது ஏனென்றால், அதிமுக தொண்டர்கள் அனைவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள். ” என்றார்.

'புரட்சித் தமிழர்’: மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பட்டம்!

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நான் தமிழக முதல்வராக பதவியேற்ற போது கடுமையான வறட்சி. தமிழகத்தின் பல இடங்களில் தண்ணீர் இல்லை. சென்னையிலும் அதே நிலைதான். அப்போது ரயிலிலே குடிநீர் கொண்டு வர திட்டம் போட்டு, உடனடியாக கொண்டு வந்து மக்களின் தாகத்தை தீர்த்தோம். அதன் பிறகு கஜா புயலால் டெல்டா கடுமையான பாதிப்பை சந்தித்தது. அந்த புயலின் வேகத்தை விடவும் வேகமாக செயல்பட்டு மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டோம். புயலால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணங்களை அள்ளி வழங்கினோம். அதன்பிறகு கொரோனா காலகட்டம். அதனை மருத்துவர்களுடன் ஆலோசித்து சிறப்பாக செயல்பட்டோம்.” என்றார்.

நீட் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் ஒரு நாடகம். திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம் என்றார்கள்; செய்தார்களா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். கட்சத்தீவை தாரை வார்த்தது திமுகதான் என குற்றம் சாட்டிய அவர், மீனவர்களுக்கான நலத்திட்டங்களை செய்தது அதிமுகதான் என்றார். 

“எம்.ஜி.ஆர் நூற்றாண்ட விழாவை சிறப்பாக நடத்தி காட்டினோம். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டினோம். ஜெயலலிதாவுக்கு புகழ் சேர்க்கும் வகையில் நினைவிடம் கட்டப்பட்டது. 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 50 ஆண்டு முன்னேற்றத்தை பார்த்தோம்.” என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.