தமிழகத்தின் பல பகுதிகளில்  கடந்த சில தினங்களாக  மழை பெய்துவருகிறது. இந்த நிலையில், வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் மிகப் பெருமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் வருவாய்த் துறை உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தச் சூழ்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இதுகுறித்து நேற்று  செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் என்று நான்கு முறைகளில் நமக்கு அலர்ட் கொடுப்பது உண்டு. தமிழகத்தில் ஏதேனும் ஓர் இடத்தில் 25 செ.மீ மழையளவு கிடைத்தால் அதனை ரெட் அலர்ட் என்று சொல்வார்கள். தொடர் மழை, கன மழை மற்றும் அதனால் ஏற்படும் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். அதனடிப்படையில் 4,399 இடங்கள் மழையினால் பாதிக்கப்படும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இந்த இடங்களில் மீட்புக்குழுவினர் தயாராக உள்ளனர். நீர் வரத்து, வெளியேற்றம் ஆகியவற்றை 24 மணி நேரமும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் எந்தவிதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும்,“வடகிழக்கு பருவமழையின்போது மழைநீரைச் சேமிக்க நீர்நிலைகளைத் தூர்வாரி வைத்துள்ளோம். பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முதல்வர் இருமுறை ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார் என அமைச்சர் கூறினார்.