தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு நீட் தேர்வு வராது என்று உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளர்.

மருத்துவ படிப்பு படிக்க மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு என்ற புதிய தேர்வை எழுத வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் அதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மாணவர்கள் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்த வண்ணம் இருந்தன. ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி மே 7 ஆம் தேதி மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி முடித்தது.

இந்த நிலையில் நீட் தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவ மாணவியும் இடம் பிடிக்கவில்லை.

இதை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாநில பாடதிட்டத்தில் பயின்ற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 4.2 லட்சம் மாணவர்களுக்கு 85% உள் இடஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.  

தமிழகத்தில் நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்காக மத்திய அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வந்ததைப்போல் பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் மாணவர்கள் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.

இந்த நிலையில், உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன், தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு நீட் தேர்வு வராது என்று உறுதி கூறியுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு விரைவில் துணை வேந்தர் நியமனம் செய்யப்படும் என்றும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.