தமிழகத்தில் பாரம்பரியமாக நடந்து வரும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தீர்ப்பு வரும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது, தீர்ப்பு எழுதப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு முன் வழங்க முடியாது என கூறிய உச்சநீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஏர் தழுவுதல் என அழைக்கப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டை, காளைகளை துன்புறுத்துவதாக கூறி, பீட்டா என்ற அமெரிக்க சார்பு நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மறுபுறம் காளைகளை வன விலங்களுக்கு இணையாக காட்சி பட்டியலில் மத்திய அரசு இணைத்தது.

இதனால், உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. தமிழர்களின் உணர்வோடு சம்பந்தப்பட்ட, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் எழுந்தது.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க, தமிழகம் முழுவதும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், கடைசி நேரத்தில் உச்சநீதிமன்றம் தடை விதித்ததால், நடக்கவில்லை.

உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்க கோரி, தமிழக அரசு உட்பட 9 அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன. எப்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துவிடும் என்று அனைவரும் எதிர் பார்த்து இருந்த நிலையில், இன்று திடீரென அதிர்ச்சிய அளிக்கும் அறிவிப்பை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு சம்பந்தமான தீர்ப்பை, தற்போது அளிக்க முடியாது. தீர்ப்பை எழுதி வருவதால், பொங்கல் கழித்துதான், தீர்ப்பு அளிப்போம் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு குறித்து உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இந்த திடீர் அறிவிப்பு, தமிழகத்தில் போராடி வரும் மாணவர்கள், அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.